
வீதியோரம் நின்ற வாகனத்தின் கதவை திடீரென திறந்ததில் ஒருவர் உயிரிழப்பு!
வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் ரக வாகனமொன்றின் கதவை, ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது கணவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த சுமனாவதி (வயது 62 ) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பெண், பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
