அஸ்தியில் ஊழல் : சடலத்தை ஒளித்து வைத்துவிட்டு போலியான அஸ்தி கொடுத்து மோசடி!
அமெரிக்காவில், 190 சடலங்களை பதுக்கி வைத்து, அவற்றை எரித்ததாக கூறி, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றிய நபருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலராடோ மாகாணத்தின், பென்ரோஸ் (Penrose) பகுதியில், இறுதிச் சடங்கு நடத்தும் நிலையத்தை நடத்தி வந்த நபர் ஒருவருக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியில் வசிப்பவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பொலிஸாரிடம் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, 190 உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு, சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குறித்த நபர், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக, அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து, இலங்கை மதிப்பில் 24 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார்.
அத்துடன், உடல்களை எரித்ததாகக் கூறி, உறவினர்களிடம் போலி அஸ்தியை வழங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பல வருடங்களாக நடைபெற்று வந்த குறித்த வழக்கு விசாரணையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த அந்த நாட்டு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும், சடலங்களை குவித்து வைத்தது தொடர்பாக, அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்து, தனியாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.