முன்பள்ளி சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : 68 வயது நபருக்கு 60 ஆண்டுகள் சிறை!
பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 68 வயதுடைய நபர் ஒருவருக்கு, 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை என, 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக தண்டனை அனுபவிக்க வேண்டும், என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 30,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணம் செலுத்தத் தவறினால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர், இரண்டு மாதங்களுக்கும் மேலாக, பல சந்தர்ப்பங்களில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயங்களில், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, சிறுமயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, வழக்குத் தொடுப்பவர் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.
இச்சம்பவம் இடம்பெற்ற போது, 55 வயதுடையவராக இருந்த குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் நெருங்கிய உறவினர் என்றும், அவர் இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தை என்றும் தெரியவருகின்றது.
