பேருந்து பயணக் கட்டணம் குறைப்பு?

பேருந்து பயணக் கட்டணத்தை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, புதிய கட்டண விபரங்கள் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் எனத் தேசியப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், அடிப்படைக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும் அந்த அதிகார சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேருந்துப் பயணக் கட்டணத் திருத்தத்திற்கு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, பேருந்து பயணக்கட்டணம் குறைக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அதற்குப் பின்னர் பேருந்துப் பயணக்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுமென அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தொழிற்துறையைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களையும் பாதுகாப்பதே தமது பொறுப்பாகும்.

இதனையே தாம் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்படுமானால் திருத்தத்துக்கமைய பேருந்துப் பயணக் கட்டணத்தைக் குறைப்பதற்கு தயார் எனவும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.