லஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை – திருக்கோயில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரான இரண்டு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் ரூபாய் 25 ஐயாயிரம் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்ள முயன்ற போதே இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவரை சோதனை செய்த போது மணல் அகழ்வு அனுமதி பத்திரம் இருந்தும் ரூபாய் இருபத்தி ஐயாயிரம் பணம் லஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பாறை பகுதியில் குறித்த பணத்தை பெற்றுக்கொள்ள முயன்ற போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.