திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விவசாயிகள் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் பேரில், சிறுபோக அறுவடை தொடங்கியதால், அரசாங்க நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்து திறப்பற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

மேலும் விவசாயக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு தீர்மானங்களும் விரைவாக நிறைவேற்றப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு அறிக்கைகளை பொறுப்பான நிறுவனங்களால் உடனுக்குடன் அனுப்பிவைத்தல் அவசியம் என்பதனையும் மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.

மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

பயிர்களை இழந்தவர்களின் இழப்பீடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சரியான நேரத்தில் வழங்குவது, மாவட்டத்தில் காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ள பகுதிகளில் யானை வேலிகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், கால்நடை முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.சுப்ரமணியம், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் கலாநிதி தி.கருணைநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.