பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையில் திருத்தம்

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த .23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.

அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை 2025.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, நிறைவேற்றுத் தர அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 4,000 ரூபாவும், நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 2,500 ரூபாவும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து தற்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கும் குழு தீர்மானித்தது.

இந்த கட்டணங்களைத் திருத்தம் செய்தல், பாராளுமன்ற பணியாளர்களுக்கு வழங்கும் செலவுகள் தொடர்பில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும்.

இந்த சபைக் குழு பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.