சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் நேற்று திங்கட்கிழமை இரவு சட்டவிரோத மதுபானம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் முக்கிய குற்றவாளிகளான பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை கைது செய்து, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மதுபானம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.