
உறவினர் வீட்டில் திருமண விருந்து உண்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடமபெற்ற இச்சம்பவத்தில் சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தம்பதிகள் இருவரும் நேற்றையதினம் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண விருந்து உண்டுவிட்டு வீடு வந்த பின் கணவனுக்கு வாந்தி ஏற்பட்டது.
உடனடியாக வைத்தியர் ஒருவரிடம் சென்று சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகவில்லை.
பின்னர் அவர் மயங்கிய நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
