
ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
2020 – 2024 ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற்றோரின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
‘2020 – 2024 ஓய்வூதிய ஒன்றியம்’ குழுவினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை எனவும் இதேவேளை, 2025ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறுவோருக்கு 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் பேச்சுவார்த்தைக்காக பொலிஸாரால் செயலகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதிநிதிகள் ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று கருத்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி, இது தொடர்பாக அறிந்திருப்பதாகவும் பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவிடம் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி பொறுப்பளித்திருப்பதாகவும் தேர்தல் முடிந்து இரண்டு வார காலத்தின் பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.