
மாகாணசபை தேர்தல் முடிந்ததும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம்!
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தற்போதைய அரசாங்கம் இரண்டு முன்னுரிமை விடயங்களைக் கருத்திற் கொண்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்தார்.
அரசாங்கம், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும், தாமதமான தேர்தல்களை நடத்துவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியதாகப் பிரதமர் கூறினார்.
நாடாளுமன்றில் இன்று காலை பிரதமரின் கேள்வி நேரத்தின் போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், புதிய அரசியலமைப்பு எப்போது உருவாக்கப்படும் என்பதை அவைக்கு அறிவிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
இது, தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதிய அரசாங்கம் தற்போது பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்த மாதம் மற்றொரு தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் கூறினார். மாகாண சபைத் தேர்தலும் பல ஆண்டுகளுக்கு மேல் நடைபெறாமல் உள்ளது.
மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றவுடன், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் ஆரம்பிக்கும்.
தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு பாதீட்டுத் திட்டத்தில் புதிய யாப்பு உருவாக்கச் செயல்முறைக்கு நிதி ஒதுக்கவில்லை.
எவ்வாறாயினும், முந்தைய அரசாங்கத்தால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு செயல்முறையை தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் ஆலோசனைகள் மூலம் தொடர விரும்புவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார்.
எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நியாயமானதொரு காலக்கெடுவிற்குள் நிறைவுசெய்யப்படலாம் என்று தான் கருதுவதாக அவர் கூறினார்.