காட்டு யானைகளைப் பாதுகாக்க புதிய திட்டம்

ரயிலுடன் மோதி காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான திட்டத்தை வனஜீவராசிகள் திணைக்களம் தயாரித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சு, ரயில்வே திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, கல்ஓயா ரயில் நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொடை ரயில் நிலையம் வரையில் காட்டு யானைகள் அதிகளவில் விபத்துக்கு உள்ளாகக் கூடிய 7 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, அந்தப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மண் மேடுகளை அகற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் இயந்திர சாரதிகள், ரயில் நிலைய முகாமையாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் உதவி இயந்திர சாரதிகளுக்கு இந்தத் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

காட்டு யானைகள் ரயில் மார்க்கத்தைக் கடக்கும் இடங்களில் உள்ள பெயர்ப் பலகைகளும் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், குறித்த பகுதியில் ரயில் மார்க்கத்தின் இருபுறமும் 10 முதல் 20 மீற்றர் வரையான உயரம் கொண்ட மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ரயில் மார்க்கத்தின் இருபுறமும் உள்ள காட்டு யானைகளை ரயில் இயந்திர சாரதிகள் தூரத்திலிருந்து பார்க்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்