சோதனை செய்வதாக கூறி பயணியிடம் இருந்து பணத்தை பறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

பயணியிடம் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அவரிடம் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெனியாய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணி ஒருவர் திருட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்வதாகக் கூறி அவரிடம் இருந்த 21,540 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளதாகக் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது

அதனைத்தொடர்ந்து, சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் தெனியாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

தெனியாய பொலிஸ்நிலையத்தில் பணிபுரியும் குறித்த சார்ஜன்ட் இரவு நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.