மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொலைபேசி ஊடாக குழப்பம் ஏற்படுத்திய மர்ம நபர்: விசாரணைகள் ஆரம்பம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர்களை குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்ம நபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி அவர்களை குழப்பமடைய வைத்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம் பெற்றுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த வைத்தியசாலை தொலைபேசி பரிவத்தனை நிலையத்துக்கு சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் இனம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சில வாட்டுக்களுக்கு தொலைபேசி அழைப்பை மாற்றுமாறு கோரியதையடுத்து அந்த அழைப்புக்கள் மாற்றப்பட்தையடுத்து குறித்த மர்மநபர் அங்கு கடமையில் இருக்கின்ற வாட் பொறுப்பாளர் மற்றும் பெண் வைத்தியர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களை பெற்று அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் பேசியுள்ளார்.
இவ்வாறு அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை 13 பேருடன் தொடர்பை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட வைத்தியர்கள், பொறுப்பாளர்கள் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதையடுத்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் சைவர் கிரைம் பிரிவிலும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்கு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு ஏற்படுத்திய போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
