ஐ.பி.எல் போட்டியில் டோனியின் புதிய சாதனை!

18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 8 ஆவது போட்டி நேற்று வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

197 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை மஹேந்திர சிங் தோனி முறியடித்துள்ளார்.

2008 முதல் 2021 வரை 171போட்டிகளில் விளையாடி 4,687 ஓட்டங்களை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார்.

அதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும் அதன் சராசரி 32.32 ஆகும்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் மஹேந்திர சிங் தோனி 16 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து , 204 போட்டிகளில் விளையாடி 4,699 ஓட்டங்களை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

அவற்றில் 22 அரை சதம் அடங்கும் அதன் சராசரி 40.25 ஆகும்.