மட்டக்களப்பில் முகநூலில் ஆபாச புகைப்படத்தை பதிவிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி இடை நீக்கம்

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் திருமணம் முடித்த பெண் ஒருவருடன் திருமணம் முடித்துள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்  திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது அதனை புகைப்படம் எடுத்து முகநூலில் பிரசுரித்த சம்பவம் தொடர்பாக  நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பொத்துவில் பொலிஸாரால் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது கைது செய்யப்பட்டவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஜனவரி தொடக்கம் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கம் மீறி நடந்துகொண்ட 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.