தென்கொரியாவில் காட்டுத்தீ: 16 பேர் பலி

தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான, உய்சோங்கில் ஏற்பட்ட காட்டுத்தீயானது பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டை மீறி வேகமாகப் பரவுவதாகத் தென் கொரிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்த 9,000 தீயணைப்பு படையினர் , 130க்கும் மேற்பட்ட உலங்கு வானூர்திகள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காட்டுத்தீயால் சுமார் 43,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி மற்றும் 1,300 ஆண்டுகள் பழமையான பௌத்த கோவில் உட்பட நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தீக்கிரையாகின.

உய்சோங் நகரத்துக்கு அருகில் சியோங்சாங் கவுன்டியில் உள்ள ஒரு சிறைச் சாலையிலிருந்து சுமார் 2,600 கைதிகளை இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.