வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்!

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு உரிய வகையில் அரசாங்கத்தினால் மீள ஒப்படைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அமைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டடம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, விகாரையொன்று கட்டப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாகக் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரனிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த அவர், மக்களின் காணியை மக்களுக்கு பெற்றுத்தருவதே தங்களது பொறுப்பு எனவும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களது அரசாங்கம் தேர்தல் விடயங்களில் தலையிடாது எனவும் கடந்த அரசாங்கங்களைப் போன்று சூழ்ச்சிகளை மேற்கொண்டு தேர்தலை பிற்போடுவதற்கான நோக்கம் தங்களுக்கு இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.