மட்டு ஆரையம்பதியில் வீட்டுக்குள் மதுபான உற்பத்தி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோத மதுபானங்களை கைப்பற்றியுள்ளதுடன், உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

570 லீற்றர் கோடா அடங்கிய நான்கு பரல்களுடனும், 30 லீற்றர் வடி சாராயத்துடனும், அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றில் வடி சாராயம் காச்சிக்கொண்டு இருக்கும் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்ற பொருட்களையும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.