துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை – காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு கைத்துப்பாக்கி திடிரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லதம்பி நித்தியானந்தன் (வயது – 39) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

வழமைபோன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியை பெற்றுக்கொள்வதற்கு ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றினை பெற சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த கைத்துப்பாக்கியை பரிசீலனை செய்வதற்காக மேசையில் வைத்த வேளை திடிரென கைத்துப்பாக்கி தவறி வெடித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் பீரிஸ் நந்தலாலின் பணிப்புரைக்கு அமைவாக காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் வழிகாட்டுதலில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு வலது காலில் துப்பாக்கி ரவை துளைத்துச் சென்ற நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

  • Beta

Beta feature