
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வெளிநாட்டு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை எடுத்து செல்ல முயன்றபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழு அவர்களை கைது செய்துள்ளனர்.
அவர்கள் ஒரு திருமணமான இந்திய தம்பதியர் என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரான கணவருக்கு 32 வயது எனவும் அவரது மனைவிக்கு 29 வயது எனவும் தெரியவந்துள்ளது.
டுபாய்க்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2.400 கிலோகிராம் குஷ் போதைப்பொருள், அதன் வாசனை வெளியே பரவாமல் தடுக்க பொலத்தீன் தாள்களில் பொதி செய்யப்பட்டு, மரப் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு, துணியால் மூடப்பட்டு, போதைப்பொருள் மோப்ப நாய்களைத் தவறாக வழிநடத்த கற்பூரப் பொடியால் பூசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள் பொட்டலங்கள் அவர்கள் கொண்டு வந்த 2 சூட்கேஸ்களின் இருபுறமும் கம் பயன்படுத்தி கவனமாக ஒட்டப்பட்டு, பின்னர் மீண்டும் ஒன்றாக ஆணியடிக்கப்பட்டதால், சூட்கேஸ்களில் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்லாந்தின் பெங்காக்கில் இருந்து போதைப்பொருள் கையிருப்புடன் புறப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருளையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.