தீ விபத்தில் 59 பேர் உயிரிழப்பு; 10 பேர் கைது

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தமை தொடர்பில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 155 பேர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோக்கானி என்ற நகரில் உள்ள குறித்த களியாட்ட விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது.

நாட்டின் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான DNK இன் இசை நிகழ்ச்சிக்காக  500 பேர் அங்கு கூடியிருந்தனர்.

குறித்த இசைக்குழுவில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே உயிர் பிழைத்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்குக் காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேரை கைதுசெய்துள்ள பொலிஸார் அவர்களைத் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.