பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை – ஆராய்கின்றது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய தடைகளின் ஒரு பகுதியாக பல நாடுகளின் பிரஜைகளிற்கு போக்குவரத்து தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

41 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ள டிரம்ப் நிர்வாகம் இந்த நாடுகளை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.

முதல் பிரிவில் ஆப்கானிஸ்தான் சிரியா ஈரான் வடகொரியா கியுபா உட்பட பத்துநாடுகள் காணப்படுகின்றன.

இந்த நாடுகள் முழுமையான போக்குவரத்து தடை ஆபத்தை எதிர்கொள்கின்றன.

இரண்டாவது பிரிவில் எரித்திரியா ஹெய்ட்டி லாவோஸ் மியன்மார் தென்சூடான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.

இந்த நாடுகள் ஒரளவு விசா தடைகளை எதிர்கொள்ளக்கூடும் இதன் காரணமாக கல்விமாணவர் விசாக்களுக்கும் குடிவரவு விசாக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

மூன்றாவது பிரிவில் பாக்கிஸ்தான் உட்பட 26 நாடுகள் காணப்படுகின்றன, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்களின் தவறுகளை திருத்துவதற்கு 60 நாட்களிற்குள் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ஒரளவு தடைகளை எதிர்கொள்ளலாம்.

இந்த பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ உட்பட டிரம்ப் நிர்வாகத்தினர் இந்த தடைகளுக்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.