காட்டிக்கொடுத்த சக மாணவனை பழிவாங்க தீவைத்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்!

காட்டிக்கொடுப்பிற்குப் பழிவாங்குவதாகக் கூறி வகுப்பறையில் ஒரு  மாணவனுக்கு தீ வைத்த  ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூவரை கம்பளை குருந்துவத்த பொலிஸார் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வகுப்பறையிலிருந்த தின்னர் போத்தலை திருடியமையை இவ்வாறு காட்டிக் கொடுத்தமைக்காக கோபம் கொண்டு கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட யடபான பிரதேசத்திலுள்ள ஆரம்ப வித்தியாலயத்தில் 10 வயது, 11 வயது மாணவர்கள் மூவர் வகுப்பறையில் நிறச்சாய பாத்திரத்திற்கு தின்னர் போட்டு அதில் தீமூட்டி வேறொரு மாணவரின் உடலுக்கு வீசியதால் அந்த மாணவனின் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்தாம் தரத்திலுள்ள மாணவர்களால் அங்கு மலசலக்கூடத்திற்கு அருகில் அழைத்துச் சென்று இவ்வாறு செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

ஒரு மாணவர் போத்தலுக்கு அந்த தின்னர் நிரப்பி பாடசாலை புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்தமையை பாடசாலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தமையின் காரணமாக தீ வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்பு பொறுப்பாசிரியை இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த காட்டிக்கொடுப்பு தொடர்பில் கோபம் கொண்ட அந்த மாணவன் உள்ளிட்ட மாணவர்கள் இருவர் இவ்வாறு செய்துள்ளனர்.

அந்த மாணவர் அதிலிருந்து தப்பிக்க முயற்சித்த போதிலும் காலில் சிந்தியதால் அவரது உடலில் தீப்பிடித்த நிலையில் சத்தமிட்டுக் கொண்டு ஐந்தாம் தரத்திலிருந்து நான்காம் தரத்திற்கு ஓடிப்போயுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நான்காம் தரத்தில் உள்ள ஆசிரியை ஒருவரே இந்த தீயை அணைத்துள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட மாணவனை குருந்துவத்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கம்பளை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலையின் அதிபர் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளாமல் மறைத்துள்ளார்.

நிறச்சாயம் பூசும் போது புத்தர் சிலைக்கு ஏற்றியிருந்த விளக்கு தின்னரில் விழுந்ததால் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகத் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இந்த மாணவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறிருக்கும் போது குருந்துவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் குறித்த மூன்று மாணவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க