
ஜேர்மனியில் விமான சேவைகள் இரத்து!
ஜேர்மனி விமான நிலைய பணியாளர்கள் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்தாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் ஹம்பேக் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அது நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பாக விஸ்தரிக்கப்பட்டது.
அதற்கமைய, பிராங்ஃபர்ட், மியூனிக், பேர்லின் மற்றும் பிற முக்கிய விமான நிலையங்களுக்குப் பயணிகள் செல்வதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியாக விமான சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
குறிப்பாக ஜேர்மனியின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான பிராங்பர்ட். முற்று முழுதாக செயலிழந்துள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை புறப்படவிருந்த 143 நீண்டதூர விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சேவைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில் 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை மற்றும் போக்குவரத்து ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேர்டி தொழிற்சங்கம், முன்னறிவிப்பு எதுவும் அற்ற நிலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தமை நியாயமற்றது என ஜேர்மனிய ஊடகங்கள் கண்டித்துள்ளன.
எவ்வாறாயினும், ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள உயர்வு மற்றும் சிறந்த சலுகைகளைப் பெறுவதற்கு வேறு வழியில்லை எனவும் அந்த சங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.