
மட்டு வாழைச்சேனையில் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணையடியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பஞ்சாட்சரம் சவுந்தராஜன் (வயது 41) என்ற கோறளைப்பற்று பிரதேச சபையில் காவலாளியாக கடமையாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனினும் தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மெற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





