
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு
வேதனம் முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சருடனான இந்த சந்திப்பில், வைத்தியர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைச் சரிசெய்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.
பணிகளை முன்னெடுப்பதற்குக் கால அவகாசம் வழங்கிப் பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தைக் கைவிடுமாறு அமைச்சர் கோரியிருந்தார்.
வைத்தியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையொன்றை பாதீடு தொடர்பான இறுதி வாக்கெடுப்புக்கு முன்னதாக முன்வைப்பதாகச் சுகாதார அமைச்சர் உறுதியளித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை பாதீடு தொடர்பான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள எதிர்வரும் 21 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கு தங்களது சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
