பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை வேதனத்தை 1,700 ரூபாயாக மாற்றுவதற்கு அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்த அடிப்படை வேதனமாக1,350 ரூபாய் உள்ளதுடன் அதனை 1,700 ரூபாயாக உயர்த்துவதற்கு அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

தற்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 1,350 ரூபாயும் மேலதிக தேயிலைக்கான கொடுப்பனவாக 350 ரூபாயும் செலுத்தப்படுகிறது.

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது 1,700 ரூபாய் வழங்கப்படுகிறது.

சில நிறுவனங்கள் இதற்கு இணங்கியுள்ள போதிலும் சில நிறுவனங்கள் இதற்கு இணங்காமல் உள்ளன.

இதற்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் 25 நாட்கள் தொழிலுக்கு செல்லும் போது அவர்களுக்கு அடிப்படை வேதனமாக 33,750 ரூபாய் வேதனம் செலுத்தப்படும்.

எனவே, பெருந்தோட்ட தொழிலாளர்கள் 25 நாட்கள் தொழிலுக்கு வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.