
கிழக்கில் இயங்கி வரும் அடிப்படைவாதக் குழு தொடர்பில் விசாரணைகள்!
கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் சந்தேகத்துக்குரிய குழுவொன்று தொடர்பில் தகவல்கள் மாத்திரமே கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த விஜேபாலவை மேற்கோள்காட்டி வாரயிறுதி ஆங்கில பத்திரிகையொன்றில் வெளியான செய்தியில், கல்முனை பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவொன்று இயங்கிவருவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர் ஒருவர் அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், இந்த விடயம் தொடர்பில் முதற்கட்ட தகவல்கள் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும், அதன்படி புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு தேசியப் பாதுகாப்பு தொடர்பில் உரிய வகையில் விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார்.
எனவே, தற்போது தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான பணிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
