நாட்டில் 90 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
நாட்டில் தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்கள், குறைந்த அளவிலேயே கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ விநியோக பிரிவின் தகவலுக்கமைய, விநியோகிப்பதற்கு முடியாத பல மருந்துகள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, கொலஸ்ட்ரோலுக்கான மருந்துகள் உள்ளிட்ட அவசியமான பல மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் விநியோகஸ்தர்களுக்கு நாணய கடிதங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன் இதனால் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
குறித்த நிலையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ கோரியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாகச் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனியிடம் வினவிய போது,
அதற்குப் பதிலளித்த அவர், இன்சுலின்களுக்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
விநியோகத்துக்கான பொறுப்பேற்ற நிறுவனம், இன்சுலினை விநியோகிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதும் மாற்று விநியோகஸ்தர்கள் தொடர்பில் ஆராயப்பட்டும் வருகிறது.
அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படும் 60 மருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அரசாங்கங்ளுக்கு இடையில் ஒப்பந்தம் ஊடாக அவ்வாறான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்

