இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிகளை பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு!

மட்டக்களப்பில் வெள்ளை தோல் உள்ள ஒரே ஒருவன் நான் தான், ஏனென்றால் அங்கு வெள்ளைக்காரன் வருவதேயில்லை, என மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கின் சுற்றாலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காகவே, கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதி வழங்கப்பட்டதாக, அப்போதைய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

மட்டக்களப்பில் உள்ள ஒரே வெள்ளைக்காரன், வெள்ளை தோல் உள்ளவன் நான் தான் என்றே நான் எப்போதும் குறிப்பிடுவேன், ஏனென்றால் அங்கு வெள்ளைக்காரன் வருவதில்லை.

உரிய போக்குவரத்து வசதி இல்லை, அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் இல்லாத ஒரு பகுதியில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு, மதுபானசாலை அனுமதி மாத்திரம் வழங்கி பயனில்லை, ஆனால் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவே இவை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல அபிவிருத்தி செயற்பாடுகள் காணப்பட்ட நிலையில், இந்த மதுபானசாலை அனுமதி வழங்கப்பட்டமை குறித்து நாம் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டு வந்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இவ்வாறான எட்டு மதுபானசாலைகள் வரவிருந்த நிலையில், நாம் வீதிகள் தோறும் போராட்டங்களை மேற்கொண்டோம், அந்த பிரதேச செயலாளர்களின் தலையீட்டினால் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஒரு மதுபானசாலை மாத்திரமே திறக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அம்பாறை பெரியநீலாவனை பிரதேசத்தில் மதுபானசாலை ஒன்றை புதிதாக திறப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனுமதிபத்திரம் முன்னைய அரசாங்கத்திலா அல்லது தற்போது வழங்கப்பட்டதா, என எனக்கு தெரியாது.

அம்பாறை பெரியநீலாவனையில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலையை திறக்க, ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.

அத்துடன், இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு, அதனை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் என்று நாம் நம்புகின்றோம்.

அதேவேளை, மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு, தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுக்கிறேன், என தெரிவித்தார்.