
சாய்ந்தமருதில் திடீர் சுகாதார பரிசோதனை நடவடிக்கை
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு வியாபார நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ. வாஸீத் அஹமட் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ஆகியோரால் பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தமது கடமையும், பொறுப்பும் ஆகும் என்ற அடிப்படையில் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்களும் செய்ய உத்தேசித்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களூடாக அறியத்தருமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை ஒத்ததாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவு – 01 மற்றும் 02 ஆகியவற்றில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் பழக்கடைகள் முதலானவைகள் கூட திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜே.எம். நிஸ்தார், ஏ.எல்.எம். அஸ்லம், ஏ. வாஸீத் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் முதலானோர் இந்த களப்பரிசோதனையில் கலந்து கொண்டனர்.
இதன்போது எதிர்வரும் ரமலான் மாதத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் பொது சுகாதாரத்துக்கு பொருத்தமான வகையில் உணவு தயாரிப்பது தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் தேவையான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

