![](https://minnal24.com/wp-content/uploads/2024/02/courts.jpg)
வித்தியா கொலை வழக்கு : குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீது விசாரணை!
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மரணதண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று ப்ரீத்தி பத்மன் சூரசேன,ஜனக் த சில்வா,சம்பத் அபேக்கோன் ஆகிய மூவரடங்கிய நீதியரசர் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்ட மா அதிபரின் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இந்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு நாளொன்றை ஒதுக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.
அதன்படி உரிய மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதியரசர் ஆயம் உத்தரவிட்டது.
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பின்னர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் எழுவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இவர்கள் எழுவரும் இந்த மரணதண்டனை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து இந்த தீர்ப்பை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவிடக்கோரி மேன்முறையீடு செய்தனர்
மேலும் தங்களை இந்த குற்றச்சாட்டிலிருந்து விலக்கி தாம் நிரபராதிகள் என தீர்ப்பளிக்குமாறும் குறித்த மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.