
மட்டக்களப்பு பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்த 21 வயது இளைஞன் கைது!
மட்டக்களப்பில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி வங்கி முகாமையாளர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபா மோசடி செய்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்
அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றிவரும் ஒருவர் டின்மீன் வியாபாரத்திற்காக வியாபாரி ஒருவருக்கு 29 லட்சம் ரூபா பணம் கொடுத்துள்ளார்.
வியாபாரம் செய்யவென பணத்தை பெற்றுக்கொண்ட வியாபாரி வர்த்தக நடவடிக்கை எதையும் முன்னெடுக்காமல் இருக்கவே பணத்தை கொடுத்த வங்கி முகாமையாளர் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
எனினும் பணத்தை பெற்ற வியாபாரி பணத்தை தருகிறேன் என்று சொல்லி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.
குறித்த வங்கி முகாமையாளர் தனது வங்கிக்கு அடிக்கடி வந்து தன்னுடன் நட்பாக பழகும் 21 வயது இளைஞர் ஒருவரிடம் தான் இவ்வாறு வர்த்தகம் செய்ய பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞன் எனக்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் அத்துடன் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும் தெரியும் நான் அவருடன் பேசி பணத்தை வாங்கி தருகின்றேன் ஆனால் அந்த பணத்தில் 3 வீதம் கமிஷன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
அதற்கு சம்மதித்த வங்கி முகாமையாளரை கூட்டிக் கொண்டு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்று வெளியில் வங்கி முகாமையாளரை நிறுத்திவிட்டு தான் மட்டும் உள்ளே சென்று வந்து எல்லாம் பேசிவிட்டேன் விரைவில் பணம் கிடைத்துவிடும் என தெரிவித்து கமிஷன் முற்பணமாக 30 ஆயிரம் ரூபாவை வாங்கியுள்ளார்.
சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் தனது கமிஷன் பணத்தில் மிகுதி 20 ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும் என்றும் தான் பொலிஸ் காரியாலயத்தின் முன் நிற்பதாக தெரிவித்து முகாமையாளரை அழைத்துள்ளார்.
20 ஆயிரம் ரூபாவுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திக்கு சென்ற வங்கி முகாமையாளர் தானே பணத்தை கொடுப்பதாக தெரிவித்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தான் வாங்கிச் சென்ற பழங்களை பொலிஸ் அத்தியட்சகரிடம் கொடுத்து “நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி மிகுதி 20 ஆயிரம் ரூபாவை கொண்டு வந்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதனைகேட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த முகாமையாளரை ஆச்சரியமாக பார்த்து என்ன செய்தேன் என கேட்டபோது முகாமையாளர் தான் வியாபாரம் செய்ய பணம் கொடுத்து ஏமாந்ததையும் இளைஞன் ஒருவர் தனக்கு உதவ முன்வந்ததையும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட பொலிஸ் அத்தியட்சகர் தனக்கு அப்படி ஒரு இளைஞனையும் தெரியாது என்றும் தான் புதிதாக நியமனம் பெற்று இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரின் பெயரை சட்டவிரோதமமாக பயன்படுத்தி பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
