புதிய ஜனநாயகவாத மின்சார சட்டம் கொண்டு வரும் விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது!

புதிய ஜனநாயகவாத மின்சார சட்டம் கொண்டு வரும் விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு 20ஆம் இலக்க மின்சார சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.

2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மின்கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை முன்வைக்குமாறு மின்சக்தி அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் வெளிப்படுத்தாமல் வெறுமனே இணையத்தளத்தில் மாத்திரம் குறிப்பிட்டுள்ளதாக சஞ்சீவ தம்மிக குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் மக்களின் கருத்துகளை முன்வைப்பதற்கான திகதி எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதாக இல்லை என இலங்கை மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.