
சாணக்கியன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட 18 பேர் இறுதி அஞ்சலிக்கு வர வேண்டாம் : துண்டுப்பிரசுரம்!
இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வரவேண்டாம் என தெரிவித்து, 18 பேருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்று அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பல்வேறு உட்கட்சி பிரச்சினைகள் இருந்து வருவது யாவரும் அறிந்ததே. கட்சி சம்மந்தமாக முடிவுகள் எடுப்பதில் ஒற்றுமையின்மை மற்றும் கட்சிக்கு எதிராக உறுப்பினர்களே வழக்கு தாக்கல் செய்த சம்பவங்கள் அண்மை காலமாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த இறுதிசடங்கில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த 18 பேரின் பெயர்கள் மற்றும் படங்களை பிரசுரித்து துண்டுப்பிரசுரம் அச்சடிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் சேயோன் ஆகியோர் அடங்கலாக 18 பேரை மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள வரவேண்டாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
