
இத்தாலியில் இலங்கையர்களுக்கான வேலை விசாக்களை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை
இத்தாலியில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்பை வழங்கும் பணி விசாவை மீண்டும் வழங்குவதை விரைவுபடுத்துமாறு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இத்தாலிய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இலங்கைக்கான இத்தாலிய தூதருடனான சந்திப்பின் போது, இலங்கையர்களுக்கான பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி , மீண்டும் பணி விசாக்களை வழங்குவதை விரிவுபடுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பணி விசாக்கள் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் தூதரிடம் கேட்டபோது, இத்தாலிய அரசாங்கம் பல நாடுகளுக்கு பணி விசாக்கள் வழங்குவதை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும் தூதர் சுட்டிக்காட்டினார்.
வேலை விசாக்களை மீண்டும் வழங்குவதற்கான இலங்கையின் கோரிக்கையை தொடர்புடைய இத்தாலிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்தநிலையில், இத்தாலியில் இலங்கை ஓட்டுநர் உரிமங்களை அங்கீகரிப்பது குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றன, இந்த விடயத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை விரைவுபடுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், இரு நாடுகளும் நிலுவையில் உள்ள பல இருதரப்பு ஒப்பந்தங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, இதில் இடம்பெயர்வு மற்றும் நடமாட்ட ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் 1952 ஆம் ஆண்டு முதல் நீடித்து வருவதை தூதர் பிராங்கோவிஹ் எடுத்துரைத்தார். இத்தாலி இலங்கையின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி சந்தை என்றும், தற்போது 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, 2024ஆம் ஆண்டில் 38,709 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என்பதையும் இச்சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
