மாமனார் மருமகனுக்கிடையில் கைகலப்பு: சம்பவ இடத்திலேயே பலியான மாமனார்

-சம்மாந்துறை-

அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு மாமனார் மருமகன் இடையே இடம்பெற்ற கைகலப்பில் மாமனார் உயிர் இழந்துள்ளார்.

இதன் போது  மத்திய வீதி, மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிர் இழந்துள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னம்பிள்ளை கிராமம் பகுதியில் அமைந்துள்ள மகளின் வாடகை வீட்டில் மாமனார் மருமகனுக்கிடையில் குடும்பத் தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் போது மாமனார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதுடன் மாமனார் மருமகன் இடையே நடைபெற்ற கைகலப்பின் போது தாக்கப்பட்டு குறித்த நபர் மரணமடைந்தாரா அல்லது மாரடைப்பு காரணமாக மரணமடைந்தாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை, சம்பவத்தில் சந்தேக நபரான ஆலிம் சேனை 02, மூதூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மருமகனை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைகலப்பில் மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்