
புதிய அரசியல் அமைப்பு வாக்கெடுப்பு : தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!
ஆட்சியில் உள்ள ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பதுடன் பொதுசன வாக்கெடுப்பில் தோற்கடிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்து சமகால அரசியல் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடிய நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களிடம் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைையவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது என்பது எமக்குத் தெரியும்.
அவ்வாறான ஒரு நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சில தேவையற்றவர்களை மக்கள் நிராகரித்துள்ள நிலையில் பெரும்பான்மை வாக்குகளை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு வழங்கியுள்ளனர்.
ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்திக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவில்லை என்ற ஆதங்கத்தில் சில பகுதி மக்கள் வாக்களித்திருந்தாலும் நடைமுறையில் இருந்த தேர்தல் முறையால் யாழ் தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்கள் கிடைத்தது.
அது ஒரு பிரச்சனை அல்ல அதனை நாம் சரி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது உள்ள பிரச்சனை சிங்கள பெரும்பான்மை உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் இருக்கின்றது.
தாங்கள் நினைத்தை செய்யும் பலம் அவர்களிடம் இருக்கின்ற நிலையில் சிங்கள மக்களிடம் தமது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்வதற்கும் சர்வதேசத்திடமும் நற் பெயரை பெறுவதற்காகவும் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாராக இருக்கின்றனர்.
ஏனெனில் தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இந்த விடயங்களை மூடி மறைப்பதற்காக புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை சிங்கள பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவார்கள்.
பாராளுமன்றத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் குறைந்தது 10 பேராவது ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு நிறைவேறுவதை எதிர்க்க வேண்டும்.
அதற்காகவே சக தமிழ் கட்சிகளுடன் பேச்சு வர்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையில்
அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருக்கிறோம்.
உருவாகவுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பை 10 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாம் எதிர்ப்பது மட்டும் போதாது மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்புக்காக விடப்படும் போது தமிழ் மக்கள் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பை அறுதிப் பெரும்பான்மையுடன் எதிர்க்க வேண்டும்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளில் உள்ள கோபத்தை காரணம் காட்டி ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை எதிர்ப்பதில் இருந்து பின்வாங்குவோமானால் தமிழ் மக்கள் இன்னும் 100 வருடங்கள் பின்னோக்கி நகர்த்தப்படுவது நிச்சயம்.
சர்வதேசம் தற்போது உள்ள அரசாங்கத்திற்கு தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என அழுத்தங்கள் கொடுத்து வருகிறார்கள்.
ஏனெனில் அரசாங்கம் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்குவோம் என கூறுவரும் நிலையில் சர்வதேச சமூகமும் புதிய அரசியலமைப்பை எதிர்பார்த்து இருக்கிறது.
எமது பிரச்சனையை ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்குள் முடக்கம் முயற்சிக்கு எமது மக்கள் பங்காளிகளாக அமைந்து விடக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகிறோமே அல்லாமல் எமது சொந்த அரசியலை முன்னெடுப்பதற்கு அல்ல.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வரவுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் சர்வஜென வாக்கெடுப்பில் தோற்கடிக்காமல் விட்டால் அரசாங்கம் சர்வதேசத்துக்கு தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பை ஏற்று விட்டார்கள் அவர்களின் இனப் பிரச்சனை தொடர்பில் நாமே பேசிய தீர்ப்போம் என கூறி விடுவார்கள் சர்வதேசமும் அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொள்ளும்.
ஏனெனில் வாக்களித்தவர்கள் தமிழ் மக்கள் வாக்களித்த பின் நாம் தமிழ்த் தேசியக் கட்சிகளில் உள்ள கோபத்துக்காக வாக்களித்து விட்டோம் எமது இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசமே தலையிடு எனக் கூறுவதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளாது.
தமிழ் தேசிய கட்சிகளின் கொள்கைகள் நிலைப்பாடுகளில் தமிழ் மக்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் அவை காலப்பகுதிகளில் திருத்திக் கொள்ள முடியும் ஆனால் வாக்களித்த பின் எமது மக்களின் எதிர்காலம் தொடர்பில் பேசிப் பயனற்றது.
ஆகவே தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கு வர உள்ள புதிய அரசியல் அமைப்பு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பாகவே வரவுள்ள நிலையில் பாராளுமன்றம் அங்கீகரித்தாலும் உங்களுக்கு கிடைக்கின்ற பொன்னான வாக்குகளால் தோற்கடித்து எமது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமையை பாதுகாப்பது மக்களின் வரலாற்றுக் கடமையாகும், என அவர் மேலும் தெரிவித்தார்.
