
திருகோணமலையில் வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை உடன் விடுவிக்குமாறு கோரிக்கை!
திருகோணமலை மாவட்ட மொரவேவா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மொராவேவா பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மொறவெவ பிரதேச செயலாளர் ஆ. நாவேஸ்வரனின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற குறித்த கூட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமை தாங்கினார்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன்,
மொரவெவா பகுதியில் அமைந்துள்ள நாலாம் கண்டத்தில் உள்ள காணி உரிமையாளர்கள் தத்தம் காணிகளில் குடியமர நீண்ட காலமாக அனுமதிக்கப் படாமை பற்றியும் அவர்களை உடன் குடியமர்த்த ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள காணிகளை வனத்துறை கையகப் படுத்தியுள்ளதாகவும், இவற்றை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வனத்துறை அதிகாரிகள் மேலிடத்தோடு பேசி இது பற்றி அறியத் தருவதாகக் கூறினர். பன்மதவாச்சி ஊரில் வடிகால் வசதிகள் சரியாக இல்லை என்றும் இதன் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதாகவும் இதைத் தடுக்க வடிகால்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்,
முதலிக் குளம் பாடசாலையில் பெளதீக வளங்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இவற்றை நீக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இவற்றை தீர்க்க உடன் நடவடிக்கை எடுப்பதாக கல்வி திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும் நொச்சிக் குளம், சாந்தி புரம், ஒளவ்வை நகர் ஆகிய ஊர்களில் உள்ள வீதிகள் பழுதடைந்து உள்ளதாகவும் அவற்றை திருத்த ஆவன செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் கேட்டுக் கொண்டார்.
