அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்
அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஜே.எம்.பைறூஸ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் இன்று காலை கூட்டுறவுச் சங்கத்தின் கூட்ட மண்டபத்தில் தலைவரும், சிரேஸ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கலந்து கொண்ட பொதுச்சபை உறுப்பினர்களால் ஒன்பது உறுப்பினர்கள் பணிப்பாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். எம்.ஜே.எம்.பைறூஸ், ஏ.சீ.ரிசாத், நிசார், அஸ்வர் சாலி, எஸ்.எம்.அறூஸ், ஜலால்டீன், வாஹிட் உள்ளிட்ட இரண்டு பெண்களும் தெரிவாகியுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடன் எம்.ஜே.எம்.பைறூஸ் அட்டாளைச்சேனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஜலால்டீன் ஆசிரியர் தெரிவானார்.
அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவராக மூன்று தசாப்தத்திற்கு மேலாக கடமையாற்றி பெரும் அபிவிருத்திப் பணிகளைச் செய்த மர்ஹூம் ஏ.எம்.ஜமால்டீன் அதிபர் அவர்களின் மூத்த புதல்வர் எம்.ஜே.எம்.பைறூஸ் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கூட்டுறவுச்ச சங்கத்தை ஆட்சி செய்தவர்கள் பல்வேறு ஊழல்களிலும், மோசடிகளிலும் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டு அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெருவாரியான ஆதரவுடன் தேசிய காங்கிரஸ் மற்றும் புதிய தலைமுறைக் கழகம் அணியினரின் ஒத்துழைப்போடு மாற்றத்திற்கான புதிய அணி கூட்டுறவுச் சங்கத்தை கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.