
பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வலியுறுத்தினார்.
இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
75 ஆண்டு காலமாக நிலவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஜே.வி.பியினருக்கும் இந்த சட்டத்தின் பாதிப்பு நன்றாகவே தெரியும்.
இந்த சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிட்டு வந்தது.
எனினும், தேர்தலுக்குப் பின்னர், ஒரு வாரம் கழியும் முன்பே தற்போதைய அரசாங்கம் தமது நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ளது.
தற்போது கிளிநொச்சி – கோணாவில் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருக்கு எதிராக பரந்தன் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.
பாடசாலை நிகழ்வொன்றில் பயன்படுத்தப்பட்ட கலை நிர்மாணம் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. கடந்த காலங்களிலும் காவல்துறையினர் இந்த சட்டத்தைப் பிழையாகக் கையாண்டு வந்துள்ளனர்.
நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும் போது, வடக்கிலும் தெற்கிலும் இந்த சட்டம் முரண்பாடான வகையில் கையாளப்படுகிறதென்றும் அதனை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
இதனையடுத்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கோணாவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
