போலி பெயர்கள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்திய வர்த்தக நிலையம் ஒன்று முற்றுகை!

கொழும்பில், போலி வர்த்தக முத்திரைகள் மற்றும் போலி பெயர்களைப் பயன்படுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்ட வணிக நிலையம்  ஒன்றின் மீது, நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது.

விசாரணையில், குறித்த வர்த்தக நிலையம்  VENUS, PLUMBER மற்றும் RAIDA ஆகிய பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி, போலியான குளியலறை உபகரணங்கள் மற்றும் பிளம்பிங் உபகரணங்களை தயாரித்து விநியோகித்தமை, கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த புகாரின் பேரில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, போலியாக தயாரிக்கப்பட்டு, விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய போது, சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு இணங்க, அவர்களுக்கு 150,000 ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், போலியாக தயாரிக்கப்பட்ட, 2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை அழிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான போலியான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்பில், அறியக்கிடைத்தால் மக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்