ஒன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மனவிரக்தியில் உயிரிழப்பு!

-அம்பாறை நிருபர்-

கைத்தொலைபேசி ஊடாக  ஒன்லைன்  வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட  இளைஞர், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில், சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த, முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது – 20  ) என்ற  இளைஞனே  உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மனவிரக்தி காரணமாக, உயிரை மாய்த்துக்கொள்ள  மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.  அவரை மீட்டு,  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருவதுடன், குறித்த ஆலையில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை மாத்திரைகளை உட்கொண்டு, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த இளைஞன் வெளிநாடு ஒன்றில் தொழிலுக்காக செல்வதற்கான, ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்