தொடர்ந்தும் பயணிகளை ஏமாற்றும் பேருந்துகள் : மக்கள் விசனம்
-யாழ் நிருபர்-
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக சில பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணிகள் மதவாச்சி அல்லது வவுனியா பகுதிகளில் இறக்கி விடப்படுகின்றனர்.
இவ்வாறு இறக்கி விடும்போது “பின்னால் வேறு பேருந்து வருகின்றது. நீங்கள் அந்தப் பேருந்தில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கலாம். அந்த பேருந்துக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை” என கூறப்படுகிறது.
கொழும்பில் இருந்து பயணச் சீட்டுகள் யாழ்ப்பாணத்திற்கு என பதிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில் கொழும்பில் இருந்து வவுனியா அல்லது மதவாச்சி பகுதிக்கான கட்டணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு மிகுதி பணம் மீளவும் பயணிகளிடம் வழங்கப்படுகின்றது. பயணிகள் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதை கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் என்றே காணப்படுகிறது. ஆனால் இவ்வாறு இடையில் இறக்கி விடுகின்ற பேருந்துகளின் பயணப்பாதையானது கொழும்பு, குருணாகல் தம்புள்ளை ஊடாக மதவாச்சி அல்லது வவுனியா வரை செல்கிறது.
குறித்த மோசடியில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் தேவையற்று நேரத்தை செலவழிக்க வேண்டிய தேவை ஏற்படுவதுடன் சில பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தமது பணத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த செயற்பாடுகள் உரிய அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கின்றதா அல்லது தெரியாமல் நடக்கின்றதா என்ற கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஒரு சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த நிலையிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது போல தெரியவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்