அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் உள்ள பகுதியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதுடன் சந்தேக நபரையும்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சம்மாந்துறை, வீரமுனை 3 பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 80,000 மில்லி லிட்டர் கசிப்பு, 170,000 மில்லி லிட்டர் கோடா, 130,000 மில்லி லிட்டர் வடி, 210 லிட்டர் இரும்பு பரள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. சுமார் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு அதிக பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபரை சவளைக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளைக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்