போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்
போதைப்பொருள் வர்த்தகர் சதுர மதுசங்கவின் வீட்டின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனாகொட – பெலேதகொட பிரதேசத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் வீட்டிலிருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும், 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களைப் பயன்படுத்தும் திறன் கொண்ட பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், 2 தோட்டாக்கள் மற்றும் ஒரு பயன்படுத்தாத தோட்டாவும் வீட்டின் முன் வீதியில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வர்த்தகரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டின் உரிமையாளர் மேலும் பல போதைப்பொருள் வர்த்தகர்களிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாகவும் சந்தேகிப்பதாக மீகொட பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்