விபத்து ஏற்பட்டு காலில் காயம் : விடியும் வரை வீதியோரம் படுத்திருந்த நபர் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
வீதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம்-குமாரபுரம், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி சிவானந்தன் (வயது – 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 9ஆம் திகதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார், ஊற்றம்பலப் பிள்ளையார் கோவிலடியில் அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி காலில் படுகாயம் ஏற்பட்டது, இந்நிலையில் வீட்டுக்கு செல்ல முடியாத அவர் வீதி ஓரமாக படுத்திருந்தார்.
அடுத்தநாள் காலை, அவ்வீதியால் வந்த ஊற்றம்பலப் பிள்ளையார் கோயில் தலைவர், அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்று வீட்டில் சேர்த்துள்ளார்.
அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார், பின்னர் அன்றையதினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்