
சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து திருடப்பட்ட முச்சக்கர வண்டிகள் மீட்பு!
-வவுனியா நிருபர்-
வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த நபர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்
அத்துடன் இரு முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியில் இருந்து, சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து, அவரை கீழே விழுத்தி விட்டு குறித்த முச்சக்கரவண்டி கடந்திச் செல்லப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்று, சாரதிக்கு மயக்க மருத்து கொடுத்து, முச்சக்கரவண்டி கடத்திச் செல்லப்பட்டது.
இது தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகரவின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேராவின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸதாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிஸார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரிடம், கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வவுனியா நகரப் பகுதியில் கடத்தப்பட்ட முச்சக்கரவண்டிக்கு நீலநிறபூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
அத்துடன், வவுனியா-பூவரசன்குளம் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சை நிற முச்சக்கரவண்டி, இலக்கத்தகடு மாற்றி 9 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இரு சம்பவம் தொடர்பில், கெக்கிராவ பகுதியில் வசித்து வரும் 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவேவேளை, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருவோர் தரும் குடிபானங்களை அருந்தாது, சாரதிகள் விழிப்புடன் செயற்படுமாறு வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






