
தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிப்பு!
கடுமையான இராணுவ சட்டத்தினை அமுல்படுத்த முயற்சித்த தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
அவரின் சொந்த கட்சி உறுப்பினர்களும் எதிர்கட்சியுடன் இணைந்து வாக்களித்ததனை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த செயல்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள், நாடாளுமன்றத்திற்கு முன்னால் கூடி மகிழ்ச்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், தென் கொரிய சட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கைகளுக்குத் தென் கொரிய அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அனுமதியினை பெறவேண்டும்.
தம்மைப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தான் முழு அளவிலான போராட்டங்களை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள யூன் சுக் யோல் இது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
பல மாத காலமாகத் தென் கொரியாவில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினையை அடுத்து இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயன்றார்.
இது தவிர, தென் கொரிய அரசாங்க நிர்வாகத்தைக் குறைத்து மதிப்பிடும் வட கொரியாவின் முயற்சிகளைத் தடுப்பது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று ஆளும் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றது.
அவர் மீண்டும் பதவிக்கு வர முடியுமா என்பது குறித்து தீர்ப்பளிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு 180 நாட்கள் அவகாசம் உள்ளது. அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு ஆதரவாக நிர்வாகம் அமைந்தால், அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
இந்தநிலையில், பிரதமர் ஹான் டக்-சூ பதில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
பதில் ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது மற்றும் மக்களின் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தென் கொரியாவின் பதில் ஜனாதிபதி ஹான் டுக்-சூவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இடையில் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளைப் பேணுவது மற்றும் அமெரிக்க – தென்கொரிய நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
